வன்னி : இயற்கை மரபுரிமைகளும் பண்பாட்டு நிலவுருக்களும் சூழற் சுற்றுலாவும் | மரபுரிமைகளைப் பறைதல் | பாக்கியநாதன் அகிலன்
Description
வன்னிப் பெருநிலம் என்பது இலங்கைத் தீவின் வடபுலத்தில் இயற்கை மரபுரிமைகளைச் செறிவாகக் கொண்டதொரு பிராந்தியமாகும். நீர் – நிலஞ்சார்ந்த மிகப் பரந்த இயற்கை அமைவுகளையும் அதுசார்ந்த பிற உயிரியற் சூழலையும் பண்பாட்டு நிலவுருக்களையும் உடைய வன்னி, இலங்கையின் இனத்துவ அரசியலின் ஆயுத மோதல் முடித்து வைக்கப்பட்ட பின்னருங்கூட மிகப் பெரிய அரசியற் சூதாட்ட களமாகக் காணப்படுகிறது. அந்தக் களத்தைக் கருத்து ரீதியாகவும் – பௌதிக ரீதியாகவும் கைப்பற்றுவதற்காக அண்மைக் காலத்தில் களமிறக்கி விடப்பட்டுள்ள புதிய படையணி தொல்லியலாய்வாகும். அது அறிவியல் ஆடைக்குள் தன்னை உருமறைப்புச் செய்துக்கொண்டு வனவளத் திணைக்களம், வன சீவராசிகள் திணைக்களம் முதலான உப படையணிக் கட்டமைப்புக்கள் சகிதம் முன்னரங்கிற் தொழிற்படுகின்றது. இது வெறுமனே தமிழர் வாழும் பகுதிகளைக் கைப்பற்றல், அவற்றுக்கு இடையிலான நிலத் தொடர்ச்சிகளை அறுத்தல் அதன்மூலமாக அவர்களால் முன்மொழியப்படும் பாரம்பரிய வாழிடக் கோரிக்கையைப் பௌதிக ரீதியாகச் சிதைத்தல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.